அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – இரண்டு பேர் பலி – ஒருவர் கைது!!
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பே உயர்நிலை பள்ளி அருகில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் பார்டி ஒன்றில் கலந்து கொள்ள மாணவர்கள் ஒன்று கூடியிருந்தனர். பார்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்த 19 வயதான கேமரூன் எவரெஸ்ட் பிராண்ட் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். இதில் 15 முதல் 18 வயதான ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றோர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் துப்பாக்கி தோட்டா அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களையும் பதம்பார்த்தது.
துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய 18 வயது மற்றும் 16 வயதான இருவர் நியூ ஆர்லீன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், இருவரும் உயிரிழந்துவிட்டனர். சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை செய்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய பிராண்ட்-ஐ அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இருவரும் ஹான்காக் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆவர்.