கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி: தேவகவுடா பரபரப்பு பேச்சு!!
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். இ்ந்த நிலையில் குமாரசாமியை ஆதரித்து இக்களூருவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி பேளூர், சென்னப்பட்டாவில் பிரசாரம் செய்கிறார். அது பற்றி எனக்கு தெரியும். சென்னப்பட்டணா குமாரசாமியின் கர்ம பூமி. மண்டியா மாவட்டத்தில் குமாரசாமி போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறினர். ஆனால் குமாரசாமி, நான் எனது கர்ம பூமியான சென்னப்பட்டணாவில் தான் போட்டியிடுவேன் என்று கூறி தேர்தலில் நிற்கிறார். சென்னப்பட்டணா மக்களுக்காக எனது உயிரை கொடுப்பேன் என்று குமாரசாமி கூறி இங்கு போட்டியிடுகிறார்.
குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது பல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் அமல்படுத்திய திட்டங்கள் நாட்டில் வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அறிவித்தவர், குமாரசாமி. கஷ்டப்பட்டு 2 முறை அவர் முதல்-மந்திரியாக இருந்தார். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கொடுத்த அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு ஆட்சி செய்தார். சித்தராமையாவால் விவசாய கடன் தள்ளுபடியை செய்ய முடியவில்லை. ஆனால் குமாரசாமி கூட்டணி ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இதனால் மக்கள் குமாரசாமியை கைவிட மாட்டார்கள்.
இந்த தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி வைத்து செயல்படுகிறது. வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் பா.ஜனதா மேலிடம் திடீரென்று வேட்பாளராக சோமண்ணாவை நிறுத்தியுள்ளது. சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திராவை நிறுத்தாதது ஏன்?. நாங்கள் மேற்கொண்ட பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.