இரு தேசிய கட்சிகளும் கர்நாடக பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: குமாரசாமி!!
மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர்களும், காங்கிரஸ் தேசிய தலைவர்களும் இங்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இங்கு நிலவும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. கர்நாடகத்தில் துரதிர்ஷ்டம் அவர்கள் ஒருவரை ஒருவர் பற்றி குற்றம்சாட்டி பேசி வருகிறார்கள். காங்கிரசார், பிரதமரை விஷப்பாம்பு என்று கூறுகிறார்கள்.
பதிலுக்கு பா.ஜனதாவினர் காங்கிரசாரை தாக்கி பேசுகிறார்கள். கர்நாடகத்தின் பிரச்சினைகள் பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் யாரும் பேசுவதில்லை. கர்நாடகம்-மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை உள்ளது. இதுபற்றி யாரும் வாய்திறப்பதில்லை. மவுனமாக இருக்கிறார்கள். இரு தேசிய கட்சிகளும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த என்னென்ன செய்யப்போகிறோம் என பேசுவதில்லை. இந்த இரு கட்சிகளாலும் நாட்டு மக்களுக்கு தீர்வுகாணவில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சி அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதாக மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
எங்கள்கட்சிக்கு 20 இடங்கள் தான் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. யார்-யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என பார்ப்போம். நடிகை சுமலதா எம்.பி. சிறந்த தலைவர். பெரிய கட்சிக்காரரும் கூட அவர். நாங்கள் சிறிய கட்சி என்பதால் அவரை பற்றி பேச முடியாது. எங்களுக்கு நேரம் வரும் போது பேசுகிறேன். நான் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது லாட்டரியை ஒழித்தேன். சாராயத்தை ஒழித்தேன். அவர்களுக்கு தெரியும் யாருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது. இவ்வாறு அவர் கூறினார்.