விபத்தில் இருவர் பலி: ஒருவருக்கு படுகாயம்!!
அநுராதபுரம் – ஹொரவ்பொத்தான கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (30) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெப்பித்திகொள்ளாவ பகுதியிலிருந்து காரொன்று ஹொரவ்பொத்தான நோக்கி வந்து கொண்டிருந்த போது வீதியில் நின்றுகொண்டிருந்த மாட்டுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரில் பயணித்த மூவரில் ஒருவர் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான மரதன்கடவல பகுதியை சேர்ந்த முனசிங்ககே ரோமின்த மதுபாசன ( 22 வயது ) மற்றும் ஹொரவ்பொத்தான – நிக்கவெவ சந்தியில் வசித்து வரும் ரன்னஹென்னகே சதறு பிரபாஷன (19 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய நபர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது ஹொரவ்பொத்தான மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.