சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதியிலும் இந்த ஆண்டுக்குள் 4 ஜி சேவை!!
சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஓராண்டுக்குள் 4 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.அருணாச்சல பிரதேசம், இந்திய சீன எல்லையில் உள்ள லம்போ என்ற இடத்தில் தனியார் நிறுவனத்தின் 4 ஜி சேவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அரசு நிதியுதவியுடன் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.லம்போ மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் சாலை வசதி உள்ளது. ஆனால் இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் வங்கி, கல்வி மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது இருந்தது.
இதுகுறித்து டோர்ஜி என்பவர் கூறுகையில்,‘‘ கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தி வந்தோம்.ஆனால் அதில் இன்டர்நெட் கிடைப்பது இல்லை. தற்போது தனியார் 4 ஜி சேவை துவங்கப்பட்டுள்ளதால் கூகுள் பே, போன்பே ஆகியவற்றின் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறோம். கூகுளும் நன்றாக இயங்குகிறது. ஆன்லைனில் வீடியோக்கள் பார்க்க முடிகிறது என்றார். சர்வதேச எல்லையில்,தனியார் நிறுவனங்களில் 840 செல்போன் டவர்கள் உள்ளன. 4 ஜி சேவையால் எல்லையில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தாண்டுக்குள் சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 100 சதவீத 4 ஜி சேவை வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.