சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு… காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி பதிலடி!!
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசாரத்தில் தலைவர்களுக்கிடையிலான வார்த்தைப் போருக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார்.
இந்த விவகாரம் தொடர்ந்து பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. இந்நிலையில், கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி பேசியதாவது:- ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி கடும் சிரமத்தை எதிர்கொள்கிறது. அதன் காரணமாகவே எனக்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என் மீதான தாக்குதலை அதிகரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் இன்று மிரட்டல் விடுக்கின்றனர். எனக்கு கல்லறை தோண்டப்படும் என்று சொல்கிறார்கள். இப்போது கர்நாடக தேர்தலில், பாம்பும் அதன் விஷமும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
ஆனால் பாம்பு என்பது சங்கரரின் (சிவன்) கழுத்தை அலங்கரிக்கிறது. எனக்கு என் நாட்டு மக்கள் சிவனின் வடிவம். அதனால் மக்களின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பாக நான் நன்றாக இருக்கிறேன். மகான்களின் பூமியான கர்நாடக மாநில மக்கள் காங்கிரசின் மோசமான செயல்பாடுகளுக்கு வாக்குகள் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம், மே 10ஆம் தேதி வாக்குகள் மூலம் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.