;
Athirady Tamil News

யாழில் நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு!!

0

வடமராட்சி கிழக்கில் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர்.

வடமராட்சி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு வீதித்தடைகளைப் போட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்திற்கு அண்மித்த வலிக்கண்டிப் பகுதியில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பல வாகனங்கள் மறித்து சோதனையிடப்பட்டது. நேற்றிரவு 11.30 மணியளவில் மணற்காட்டுப் பகுதியிலிருந்து பருத்தித்துறை பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப் படையினர் சோதனையிடுவதற்காக மறித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் சைகையை உதாசீனம் செய்து வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து பயணிக்க முற்பட்ட டிப்பர் வாகனம் விசேட அதிரடிப்படையினரை மோதித்தள்ளி விட்டு தப்பிக்க முயற்சித்துள்ளது.

இதன் போது டிப்பர் வாகனத்தின் விபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பாய்ந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தை அவதானித்த விசேட அதிரடிப்படையின் மற்றொருவர் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர்.

விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டின் போது டிப்பர் வாகனத்தின் பின் சக்கரத்தில் துப்பாக்கி ரவை தாக்கி காற்றுப் போனதில் டிப்பர் நிறுத்தப்பட்டது.

இதன் போது டிப்பரின் பின் பகுதியில் இருந்த இருவர் தப்பித்து சென்றள்ள நிலையில் டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டார்.

இதன் பின் டிப்பரை சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கடத்துவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் டிப்பரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்தேகநபரை பருத்துறை நிதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் தப்பித்துச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தில் படுகாமடைந்த விசேட அதிரடிப் படை வீரர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.