திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு 30 மணிநேரம் காத்திருப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பியது. அதற்கு பிறகு சுமார் 1 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர். தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்க ளுக்கு குடிநீர், மோர், பால், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சிறிய குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள வைகுண்டம் காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம், அலிபிரி ஆகிய இடங்களில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இலவச தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரத்துக்கும் மேலாகிறது. ஏழுமலையான் கோவிலில் நேற்று 82 ஆயிரத்து 582 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 43,526 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி மலையில் இதமான தட்ப வெப்ப நிலை நிலவியது. மலையில் ஜல்லென காற்று வீசியது. இதனால் பக்தர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். அங்குள்ள தங்கும் அறைகள் நிரம்பியது.