கொள்ளையடித்தது எப்படி? வீடியோ பதிவிட்ட இரு திருடர்கள் கைது – போலீஸ் அதிரடி!!!
திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு திருடர்களை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைதான இரு கொள்ளையர்களும், தாங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் அதிக இளைஞர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த திருடர்கள் திட்டம் தீட்டினர். ஸ்வரூப் நகரை சேர்ந்த பண்டி (23 வயது) மற்றும் ராகுல் (22 வயது) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி வடமேற்கு பகுதிக்கான காவல் துறை துணை ஆணையர் ஜிதேந்திர குமார் மீனா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஸ்வரூப் நகர், முகுந்த்பூர் மற்றும் நகரின் எல்லை பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.