;
Athirady Tamil News

பேச்சின்படி நடந்து காட்டுங்கள் – ஜனாதிபதிக்கு மனோ வலியுறுத்தல்!

0

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகிறீர்கள். இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள். “வோக் யுவர் டோக் மிஸ்டர் பிரசிடென்ட்!”. (பேச்சின்படி நடந்து காட்டுங்கள்!) என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விளித்து கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேதின செய்தி உரை தொடர்பில் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

இலங்கையில் இன்று இருக்கும் பெரும்பான்மை கட்சி தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்தவர், ரணில் விக்கிரமசிங்க. அதில் சந்தேகம் இல்லை. ஏனையோரை பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன.

எனினும் ஜனாதிபதியாக விக்கிரமசிங்க நியமனம் பெற்ற பின் பலமுறை இந்த கால அட்டவணைக்குள் இனப்பிரச்சினை தீர்வு என பலமுறை கூறிவிட்டார். தமிழ் மக்களுக்கும் இந்த வசனம் பரிச்சயமானதாகும்.

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13ஐ பற்றி பேசிய போது அதுவரை ஒளிந்திருந்த ஆமதுருக்கள் தெருவுக்கு வந்தார்கள். அத்துடன் அது நின்று போய் விட்டது. இன்று அரகல போராட்டத்துக்கு பிறகு, கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, சர்வதேச சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி விக்கிரமசிங்க, இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்து பேச முன் சிங்கள கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றி பேச வேண்டும். சிங்கள மக்களை விளித்து நேரடியாக கூற வேண்டும். இனிமேலும் இதை தள்ளி போட முடியாது என எடுத்து கூற வேண்டும். சர்வதேச சமூகமும்அதற்கு சாதகமாக நடந்துகொள்ளும் என நான் அறிகிறேன்.

தற்போது நிலைமையை பாருங்கள். “இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்றெல்லாம் கூறுவதற்கு முன், வடக்கு கிழக்கில் காணி பறிபோகிறது. தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகி விட்டது. சிவனை தூக்கி கடாசி விட்டு, ஆமதுருக்கள், இராணுவ துணையுடன், புத்தனை பிரதிஷ்டை செய்கிறர்கள். காவி உடையில் அரசியல் செய்யும் ஆமதுருக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு இது தான் வேளை. இல்லாவிட்டால் கடும் பதட்ட நிலைமை வடக்கு கிழக்கில் விரைவில் உருவாகும்.

மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாக தோட்ட காணிகளை பிடிக்கிறான். ஆனால், 200 வருட வரலாற்றை தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை. மலையக தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னை “தேயிலை கொழுந்து பறிக்க வந்தவன்” என்கிறார்கள். “தோட்டகாட்டான்” என்கிறார்கள். இது மலைநாட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதட்ட நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகிறது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.