திகார் ஜெயிலில் பிரபல தாதா இரும்பு கம்பியால் அடித்துக்கொலை!!
டெல்லி திகார் ஜெயிலில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா கும்பலில் தலைவன் தில்லு தாஜ்பூரியா என்ற சுனில் மான் என்பவன் அடைக்கப்பட்டு இருந்தான். இன்று காலை 6.30 மணி அளவில் ரவுடி கும்பல்களுக்கு இடையே திடீர் மோதல் உருவானது. இதில் அந்த ஜெயிலில் உள்ள மற்றொரு ரவுடி கும்பல் தலைவன் யோகேஷ் துண்டா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தில்லு தாஜ்பூரியாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினான். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தில்லுவை ஜெயில் அதிகாரிகள் மீட்டு தீனதயாள் உபாத்தியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தாக்குதலில் மற்றொரு கைதியான ரோகித் என்பவர் காயம் அடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயிலுக்குள் கொலையுண்ட தில்லு தாஜ்பூரியா மீது கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி ரோகினி கோர்ட்டு வளாகத்தில் ஜிதேந்தர் மான் சோகி என்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் இறந்தார். வக்கீல் வேடத்தில் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தில்லுவின் கூட்டாளிகள் 2 பேரை பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தில்லு சேர்க்கப்பட்டார்.
தில்லுவை போலீசார் வேறு ஒரு வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அவனுக்கும் மற்றொரு ரவுடியான யோகேஷ் துண்டாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் உச்சகட்டமாக இன்று நடந்த மோதலில் தில்லு கொல்லப்பட்டு உள்ளான். இந்த சம்பவம் மற்ற கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.