திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு- பக்தர்கள் அச்சமின்றி வரலாம் என அறிவிப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலையில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக ஆந்திர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இமெயில் வந்தது. அந்த இமெயிலில் திருப்பதி மலையில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பதி போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பதி பஸ் நிலையம் அலிப்பிரி மற்றும் மலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அலிப்பிரி வழியாக மலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. மேலும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இ மெயில் முகவரி போலியானது என போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இது குறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி கூறுகையில்:- திருப்பதி மலையில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக வந்த தகவல் பொய்யானது. இதனை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். அச்சமின்றி வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இருப்பினும் திருப்பதி மற்றும் திருமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இமெயில் அனுப்பிய நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார். இன்று காலையில் மலை அடிவாரத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடத்தினர். பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 81,183 பேர் தரிசனம் செய்தனர். 33,990 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.