நியூயார்க்கில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சி: வித்தியாசமான ஆடைகளை அணிந்து பிரபலங்கள் பங்கேற்பு..!!
அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான ஆடைகள் அணிந்து அணிவகுத்தது அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஆடை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஆணடுதோறும் மெட் காலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான உடைகள் அணிந்து அணிவகுப்பர். இதற்காக ஹாலிவுட்டின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் இணைந்து ஆடைகளை தயாரித்தனர்.
மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட்டை நினைவுகூரும் வகையில் நடப்பாண்டு மெட் காலா நடைபெற்றது. இவர் வளர்த்த பூனை ஹாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம் என்பதால் அமெரிக்க நடிகர் ஜாரெட் லெட்டோ பூனை உடையில் வந்து அனைவரையும் கவர்ந்தார். கர்ப்பிணியாக உள்ள பாடகி ரிஹான்னா வெள்ளை நிற உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது கணவருடன் இதில் கலந்துக்கொண்டார்.
அப்போது தான் கருவுற்று இருப்பதை அவர் அறிவித்தார். அமெரிக்க நடிகர் ஜெர்மி போக் 30 அடி நீளமுடைய உடையை அணிந்து வந்தார். இதில் கார்ல் லாகர்ஃபெல்ட் உருவம் கருப்பு வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த ஆடையை தயாரிக்க 5,000 மீட்டர் துணி தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட், வெள்ளை நிற உடை அணிந்து வந்தார்.