நடுவானில் ஏற்பட்ட விபத்தில் பாராகிளைடர் உயிரிழப்பு: பிரிட்டனைச் சேர்ந்தவர் கைது!!
துருக்கியின் பெத்தியே மாவட்டத்தில் கடந்த மாதம் 29ம் தேதி பாராகிளைடர்கள் 2 பாராசூட்களில் பறந்து சாகசம் செய்தனர். ஒரு பாராசூட்டில் 2 பேரும், மற்றொரு பாராசூட்டில் ஒருவரும் பயணித்தனர். பாராசூட்கள் கீழ் நோக்கி வந்தபோது தரையை தொடுவதற்கு சுமார் 20 மீட்டர் தூரம் இருந்த நிலையில், பாராசூட்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டன. இதனால் இரண்டு பாராசூட்களும் நிலைதடுமாறி அருகில் உள்ள ஓட்டல் கட்டிடத்தில் மோதி, நீச்சல் குளத்தின் அருகில் விழுந்தன. இந்த விபத்தில் 30 வயது நிரம்பிய ஆர்குட் பேசால் என்ற பாராகிளைடர் உயிரிழந்தார். தாமஸ் அயிட்கென், அன்சால் ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் அயிட்கெனை கைது செய்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், பாராசூட்கள் மோதலுக்கான காரணம் அலட்சியமாக தரையிறக்கப்பட்டதா? என்பதுபோன்ற கோணங்களில் துருக்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.