ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த பா.ஜ.க. விரும்பவில்லை: உமர் அப்துல்லா!!
தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாஜக விரும்பவில்லை. ஏனென்றால், தேர்தலில் தோற்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. தேர்தலுக்காக பிச்சை எடுக்க நாங்களும் தயாராக இல்லை. தேர்தலை நடத்தினால் நல்லது.
பாஜக தேர்தலை விரும்பவில்லை என்பதால், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை. எப்போது முடிவெடுத்தாலும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன்பிறகே முடிவெடுக்கிறது.