மத சுதந்திரத்தை மீறும் இந்தியா மீது தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க ஆணையம் பரிந்துரை!!
மத சுதந்திரத்தை கடுமையாக மீறுகின்ற இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டுமென மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (ஐஎஸ்சிஐஆர்எப்), தனது வருடாந்திர அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மத சுதந்திரம் தொடர்பான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை குறிப்பிடுகையில், ‘இந்தியாவில் அரசு அமைப்புகளும், அதிகாரிகளும் கடுமையான மத சுதந்திர மீறல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.
மேலும், இருதரப்பு சந்திப்புகளின்போது மத சுதந்திரம் குறித்த பிரச்னையை எழுப்பவும் அது தொடர்பான விசாரணை நடத்தவும் வேண்டும்’’ என அதிபர் பைடன் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் இதே போல பரிந்துரைகளை இந்த ஆணையம் வழங்கி வருகிறது. ஆனால் அவற்றை அமெரிக்க வெளியுறவு துறை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த ஆணையம் தனது அறிக்கையில், இந்தியாவில் ஆண்டு முழுவதும் மத சிறுபான்மை மக்கள் மீது கொலை, தாக்குதல், மிரட்டல்கள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு கடும் பதிலடி தந்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக உள்ளது. மத சுதந்திரம் பற்றியும், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும் புரிதல் இல்லாமல் ஆணையம் உள்ளது’ என கூறியது குறிப்பிடத்தக்கது.