சீனாவை பின்னுக்கு தள்ளியது அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்: கடந்தாண்டை விட 11% அதிகரிப்பு!!
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்தாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்து, சீனாவை 2வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சமீப காலமாக, இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி படிக்கின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு சென்று படிக்க அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2வது இடத்திலும் இருந்து வந்தனர்.
ஆனால், அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் சேவைப்பிரிவு (யுஎஸ்சிஐஎஸ்) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த கல்வியாண்டில், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் சீனாவை 2வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.சீனாவில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட குறைந்துள்ளது. இது 2021ம் ஆண்டில் 24,796 பேராக இருந்தது. ஆனால், இந்தியாவில் இருந்து வந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 64,300 அதாவது 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் 3,887 அதிகமாகி, 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது. மாணவர் பரிமாற்ற பார்வையாளர் திட்டத்தின் கீழ், கடந்த 2022ம் ஆண்டில் 7,683 பள்ளிகள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் தகுதி பெற்றுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 400 பள்ளிகள் குறைவாகும். கடந்த 2022ம் ஆண்டில் கலிபோர்னியாவில் மட்டும் 2,25,173 வெளிநாட்டு மாணவர்கள் படிக்க பதிவு செய்துள்ளனர். இது அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதத்தில் 16.5 சதவீதமாகும், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ADVERTISEMENT