ஜூன் 1ல் கடன் உச்ச வரம்பை தொடும் ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்!!
அமெரிக்க அரசு வரி வருவாயை தாண்டி செலவழிக்க உள்ளதால், கடன் வாங்க வேண்டி உள்ளது. அதிகபட்சமாக 31.4 டிரில்லியன் டாலர் (ரூ.2,512 லட்சம் கோடி) கடன் வாங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ ஜூன் 1ம் தேதிக்குள் கடன் உச்ச வரம்பு எட்டப்படும்’’ என எச்சரித்துள்ளார். கடன் உச்ச வரம்பை எட்டும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கு சம்பளம் தர அரசிடம் பணம் இருக்காது. உச்ச வரம்பை தாண்டி கடன் பெற்றால், அது டாலர் மீதான மதிப்பை பலவீனாக்கி விடும். இது அமெரிக்க பொருளாதாரத்தை இன்னும் நெருக்கடி ஆக்குவதோடு, பலரும் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள்.
அமெரிக்க டாலரை வைத்து வர்த்தகம் செய்யும் பல நாடுகளும் வீழ்ச்சியை நோக்கி செல்லக் கூடும். ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் வெள்ளை மாளிகையும் கடன் வரம்பை அதிகரிக்க விரும்பினாலும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க வெள்ளை மாளிகை மற்றும் முக்கிய எம்பிக்களின் அவசர கூட்டத்தை வரும் 9ம் தேதி நடத்த அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.