மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு !!
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றா லும் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான்.
இது சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகவும் விளங்கு வதால் சிவனடியார்கள் மட்டுமல்ல திருமால் பக்தர்களும் கொண்டாடும் பெருவிழா ஆகும். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டா பிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதியும், மீனாட்சி அம்மன் திக் விஜயம் மே 1-ந் தேதியும், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மே 2-ந்தேதியும் நடை பெற்றது. மே 3-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து மே 4-ந்தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும். சித்திரை திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிகழ்வுகளை காண மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவார்கள். இந்நிலையில், மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.