இரு தரப்பினரையும் சந்திக்கிறார் சுரேஷ் !!
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை மற்றும் அரசாங்கம் குறித்து தான் வெளியிட்ட சில விமர்சனக் கருத்துக்களின் பின்னர் இரு தலைவர்களும் தன்னை அணுகியதாகவும் இரண்டு தரப்பினரையும் சந்தித்த பின்னர் தனது தலைவிதியை தீர்மானிக்கவுள்ளதாக வடிவேல் சுரேஷ் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு வருகை தாராத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வருகை தராமையானது மக்கள் மத்தியில் இன்றளவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பதுளையில் நடத்தப்பட்ட தனியான மே தினப் பேரணிக்கான அனுமதி, மலையகத்தில் உள்ள தோட்ட சமூகத்தினருக்காக வழங்கப்பட்டதாகவும் இதனால் கட்சி பிளவடையாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் தான் விலகி இருந்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் என் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.