சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைக்கும் !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இன்று (03) நியமனம் கிடைக்குமென நம்புவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விலகுவதற்கு தூண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றுக்கு நியமனம் வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
அண்மைய வரி உயர்வை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உறுப்பினர்கள் முழு அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையை இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்வி அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கடந்த வாரம், விரிவுரைகளுக்குத் திரும்புவதாக அறிவித்த சம்மேள உறுப்பினர்கள், விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு மட்டுமே சாத்தியமாகும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி மூல விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் ஆரம்பித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.