1941 பாடசாலைகளில் விஞ்ஞானத்துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை!!
நாட்டில் உயர்தரத்தைக் கொண்ட 2 ஆயிரத்து 952 பாடசாலைகள் உள்ள நிலையில், ஆயிரத்து 11 பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞானத் துறையில் கற்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற கோப் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் இந்த விடயத்தை தெரியப்படுத்திய அவர், ஆயிரத்து 941 பாடசாலைகளில் விஞ்ஞானத் துறையில் கற்பித்தல் இடம்பெறுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக பிரவேசத்தின் போது ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்திய குழு, இதன் மூலம் அதிக Z புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியது.
அந்தப் பாடங்களுக்கு உயர்தரப் பரீட்சையின் போதும் நடைமுறைப் பரீட்சை நடத்தப்பட்டு Z புள்ளிகள் வழங்கப்படுவதால் மேலும் நடைமுறைப் பரீட்சை அவசியமில்லை என வலியுறுத்தப்பட்டது.
அதற்கமைய, இது தொடர்பில் உடனடியாக முடிவெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்தது.
அதேநேரம், கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையான சட்ட மாற்றங்களை முன்வைக்க வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அறிவித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.