கர்நாடக சட்டசபை தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்கள் சுயகட்டுப்பாடுடன் பேச வேண்டும்- தேர்தல் கமிஷன் உத்தரவு!!
கர்நாடக சட்டசபை தேர்தல், இம்மாதம் 10-ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாகவும், வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் மாறிமாறி புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதை தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம்.
முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்றவர்கள் அப்படி பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான புகார்களும், எதிர் புகார்களும் ஊடகங்களில் எதிர்மறையான கவனத்தை பெற்றுள்ளன. ஆகவே, அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.