மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல்: ராகுல்காந்தி கண்டனம்!!
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள்-போலீசாரால் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறும்போது, “மல்யுத்த வீராங்கனைகளை தாக்கியது வெட்கக்கேடானது. நாட்டின் மகள்கள் மீதான அட்டூழியங்களில் இருந்து பா.ஜனதா ஒரு போதும் பின் வாங்கவில்லை. பா.ஜனதாவின் பெண்கள் தொடர்பான முழக்கம் வெறும் பாசாங்கு தனம்.
நாட்டின் வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை வெட்கக் கேடானது” என்றார். காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹுடா இன்று அதிகாலை மல்யுத்த வீரர்-வீராங்கனைகளை சந்திக்க சென்ற போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அவர் கூறும்போது, எங்கள் மகள்களின் (வீராங்கனைகள்) உடல்நிலை குறித்து விசாரிக்க நான் ஜந்தர் மந்தருக்கு சென்ற போது என்னை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர் என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டுவிட்டரில் கூறும்போது, பா.ஜனதாவிடம் இருந்து இந்தியாவின் மகள்களை காப்பாற்றுங்கள்.
இது வெட்கக் கேடானது. அதிர்ச்சி மற்றும் அவமானகரமானது. குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண்சிங், பா.ஜனதா தலைவராகவும், பா.ஜனதா எம்.பி.யானதால் இந்திய விளையாட்டு வீரர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள். இது இந்திய விளையாட்டுக்கு ஒரு கருப்பு நாள். இந்தியாவின் மகள்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? நள்ளிரவில் எங்கள் மகள்களை துன்புறுத்தவும் அவமானப்படுத்தவும் டெல்லி போலீசாருக்கு மோடி அரசு ஏன் உத்தரவிடுகிறது? என்று கூறியுள்ளார்.