பொலிஸாரை அச்சுறுத்திய இளைஞர்கள் விளக்கமறியலில்…!!
கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திவிட்டு தப்பித்த ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
உரும்பிராய் சந்நியில் கடந்த வாரம் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டனர்.
அதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்தனர்.
அவர்கள் இருவரும் நேற்று தமது சட்டத்தரணி விசுவலிங்கம் திருக்குமரன் ஊடாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவர் சார்பிலும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்ட போதும் அதனை நிராகரித்த மன்று இருவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.