நொய்டாவில் பிரெஞ்சு தலைமை சமையல்காரர் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை!!
உத்தரப் பிரதசேம் மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 52ல் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் பெர்னார்ட் நிவானன் (66). நொய்டாவில் உள்ள பேக்கரி ஒன்றில் தலைமை சமையல்காரராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பியர் நாள் முழுவதும் ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் இதனை கவனித்துள்ளார். பியர் வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போட்டிருந்த நிலையில் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மாற்று சாவியை கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். பியர் வீட்டின் படுக்கையறையில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டு உரிமையாளர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பியர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். மேலும், பியரின் மர்ம மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். உள்ளூர் புலனாய்வுப் பிரிவு புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.