புதிய உற்சாகத்துடன் பணியாற்றுவேன்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் சரத் பவார் !!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியது. கட்சியின் சூழல் குறித்து மூத்த தலைவர்கள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் சரத்பவார் கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத் பவார் பதவி விலகுவதை யாருமே விரும்பவில்லை என்பதால், அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. தனது முடிவை உயர்மட்டக்குழு நிராகரித்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றதாக அறிவித்தார். புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளதாகவும் கூறினார்.