பாதி பேர் பெயில், பாதி பேர் ஜெயில்: நீங்க ஊழலைப் பற்றி பேசலாமா? – ஜே.பி.நட்டா தாக்கு!!
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில், கொப்பால் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: ராகுல் காந்தி ஜாமீனில் உள்ளார். சோனியா காந்தி ஜாமீனில் உள்ளார். டி.கே. சிவகுமார் ஜாமீனில் உள்ளார். ஜாமீனில் வெளியில் வந்துள்ளவர்கள் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் (காங்கிரஸ்) பிஎப்ஐ மீதான வழக்குகளை வாபஸ் பெற்றீர்கள். பஜ்ரங்தளத்தை தடை செய்யக் கோருகிறீர்கள். ஊழலில் ஈடுபட்டீர்கள். வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள்.
எனவே, இதை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரசுக்கு வாக்களித்தால் பிஎப்ஐ மீண்டும் வருவதற்கு வாக்களிக்கிறீர்கள். 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஊழலுக்கு பெயர் பெற்றிருந்தது. தற்போது பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஜி20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் வருகிறார்கள். இந்தியாவின் இந்த அடையாளம் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.