;
Athirady Tamil News

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி-சோனியா நாளை போட்டி பிரசாரம்!!

0

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 8-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரத்துக்கு 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பா.ஜனதா தேசிய தலைவர்கள், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி முதல் கட்டமாக கடந்த மாதம் (ஏப்ரல்) 29, 30-ந் தேதிகளிலும், 2-ம் கட்டமாக, கடந்த, 3-ந் தேதிகளிலும் சூறாவளி பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி இந்தமுறை ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு உள்ளது.

இதற்காக பல்வேறு இலவச திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிட்டதோடு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதசார்பற்ற ஜனதா தளம்(ஜே.டி.எஸ்.) கட்சியும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரதமர் மோடி கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். இன்று மதியம் 2 மணிக்கு பல்லாரியிலும், 4.30 மணிக்கு துமகூரு புறநகர் தொகுதியிலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். பெங்களூரு திப்பசந்திராவில் உள்ள கெம்பேகவுடா சிலையில் இருந்து பிரிகேட் ரோடு வரை இந்த ஊர்வலம் நடைபெற இருக்கிறது. ஊர்வலத்தை முடித்து விட்டு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியிலும், இரவு 7 மணிக்கு ஹாவேரி மாவட்டத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பேச உள்ளார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணிவரை பெங்களூருவில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல இருக்கிறார். பிரிகேட் ரோட்டில் இருந்து மல்லேசுவரம் சாங்கி டாங்கி ஏரி வரை இந்த ஊர்வலம் நடைபெற உள்ளது.

மாலை 4 மணிக்கு சிவமொக்காவிலும், இரவு 7 மணிக்கு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். பெங்களூருவில் 17 தொகுதிகளுக்கு பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். தொடர்ந்து நஞ்சன்கூடில் இருக்கும் நஞ்சுண்டெஸ்வரா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தபிறகு தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு மைசூருவில் இருந்து டெல்லி புறப்படுகிறார். சமீபகாலமாக தேர்தல் பிரசாரம், கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கர்நாடக தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை ஹுப்பள்ளியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

ஹுப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சோனியா காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சோனியாகாந்தி மதியம் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு 3.30 மணிக்குத் டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் 3 நாட்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

கர்நாடகாவில் ஒரே நாளில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் பிரசாரம் செய்வதால் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சி தொண்டர்களுடமே தங்களது ஆதரவாளர்களை திரட்டி பலத்தை காட்ட திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் மோடியின் தொடர் பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை மக்களிடையே வீசுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில் சோனியாவின் பிரசாரம் தங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும் என்று காங்கிரசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.