;
Athirady Tamil News

பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்- புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!!

0

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது கடைசி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு பல கருத்து கணிப்புகள் சாதகமாக இருந்தன. குறிப்பாக கர்நாடகாவின் தனியார் தொலைக்காட்சி, சி வோட்டருடன் சேர்ந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் 106 முதல் 116 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தனி மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தான் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு தெரிவித்தது. பா.ஜ.க. 79 முதல் 89 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், ஜே.டி.எஸ். கட்சி 24 முதல் 34 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது புதிய சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

அதன்படி கடந்த முறை கருத்துக்கணிப்பின் முடிவுகள் முற்றிலுமாக மாறி உள்ளன. அதன்படி பா.ஜ.க. 105 முதல் 110 இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 110 இடங்களில் ஜெயிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்ப பா.ஜ.க.வினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 90 முதல் 97 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி 116 இடங்களில் வெற்றி பெறும் என கூறியிருந்தது. அதனை ஒப்பிடும்போது தற்போது காங்கிரஸ் கட்சி பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. அதேபோல் ஜே.டி.எஸ். கட்சி 19 முதல் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 44 சதவீதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்க உள்ளதாகவு்ம, 33 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும், 14 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சிக்கும், 5 சதவீதம் பேர் மற்றவர்களுக்கு ஓட்டளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த மக்கள் தற்போது பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் பிரசாரம் முக்கிய காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்க் தள் அமைப்புக்கு தடை குறித்து கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக திரும்பியுள்ளது என்று அரசியல் வட்டா ரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் பிரதமர் மோடி தொடர்ந்து 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது, குஜராத்தை போல அவர் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திப்பது பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலையை உருவாக்கி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.