;
Athirady Tamil News

இங்கிலாந்து மன்னராக இன்று முடி சூட்டிக்கொள்ளும் 3ம் சார்லஸ்!!

0

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா இன்று (6-ந்தேதி) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண் மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது. லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. 1981-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி சார்லஸ்-மறைந்த டயானா திருமண நிகழ்ச்சி அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் அமைந்து இருந்தது.

இதேபோல நாளை நடைபெற உள்ள சார்லஸ் மற்றும் அவரது 2-வது மனைவி கமீலா முடிசூட்டு விழாவை இதுவரை நடைபெறாத வகையில் மிகபிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு இந்த சாரட் வண்டியில் தான் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. 4 டன் எடை கொண்ட இந்த சாரட் முற்றிலும் தங்க மூலாம் பூசப்பட்டதாகும். இந்த வண்டி தற்போது புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளது.

70 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி இந்த சாரட் வண்டி நாளை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வண்டி முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது ஆகும். அலங்க ரிக்கப்பட்ட 8 குதிரைகள் இதனை இழுத்துச்செல்லும். பாரம்பரியம் கொண்ட இந்த சாரட் வண்டியில் தான் இன்று மன்னர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் பக்கிம்காம் அரண்மனை தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். இந்த அற்புதமான, அபூர்வமான காட்சியினை லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக கண்டுரசிக்க உள்ளனர். விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டு பழமையான தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகி உள்ளது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோலை ஏந்தி கையில் தடியுடன் மன்னர் சார்லஸ் இந்த சிம்மாசனத்தில் அமருவார்.

அதன் பிறகு புனித எட்வர்டின் கிரீடம் அவரது தலையில் சூடப்படும். இன்றே மன்னரின் மனைவி கமீலா இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார். இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். உலக தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம், சமூக குழுக்களை சேர்ந்த 850 பிரதிநிதிகள், இங்கிலாந்து பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக், அவரது மனைவி அக்ஷரா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

விழா நடைபெறும் பக்கிம்ஹாம் அரண்மனை முழுவதும் வாடாத மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது. மேலும் விழாவையொட்டி திங்கட்கிழமை (8-ந்தேதி) இங்கிலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கண்ணைக்கவரும் வகையில் நடைபெற உள்ள இந்த முடி சூட்டுவிழா டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இதனை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.