;
Athirady Tamil News

தீவிரவாத பிரச்னையில் மறைமுக தாக்குதல் பாக். மீதான நம்பிக்கை அதன் ரூபாய் மதிப்பை விட வேகமாக குறைகிறது!!

0

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை அந்நாட்டின் அந்நிய செலாவணியை விட வேகமாக குறைந்து வருகிறது,” என்று கடுமையாக சாடினார். எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

கோவாவில் பெனாலியம் பகுதியில் உள்ள கடற்கரை நட்சத்திர விடுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, சீனாவின் சின் காங், ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அனைத்து உறுப்பினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர். அப்போது ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: கொரோனா தொற்று பாதிப்புகளை உலக நாடுகள் எதிர் கொண்டிருந்த போது, ஒரு நாட்டில் மட்டும் தீவிரவாத செயல்பாடுகள் எந்த தடையுமின்றி தொடர்ந்து கொண்டிருந்தது.

ஜம்மு காஷ்மீர் இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். தீவிரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்த கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். எந்த வழிகளில் எல்லாம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை அந்நாட்டின் ரூபாய் மதிப்பை விட வேகமாக குறைந்து வருகிறது. இவ்வாறு பேசினார்.

* பாகிஸ்தான் அமைச்சரை விமர்சனம் செய்த ஜெய்சங்கர்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்தார். கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட பிலாவல் பூட்டோ அழைப்பு விடுத்தார். அதற்குபதிலடி கொடுத்து ஜெய்சங்கர் கூறியதாவது: பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுடன் சேர்ந்து பயங்கரவாதத்தைப் பற்றி விவாதிப்பதில்லை.

இந்தியாவின் ஒருபகுதியாக ஜம்மு காஷ்மீர் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இனியும் இருக்கும். அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றின் வெளியுறவு அமைச்சராக பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு வந்துள்ளார். அது பலதரப்பு ராஜதந்திரத்தின் ஒரு பகுதி. அதற்கு மேல் எதையும் பார்க்க வேண்டாம் எஸ்சிஓ உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் பிலாவல் பூட்டோ அதற்கேற்ப மரியாதையுடன் நடத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.