;
Athirady Tamil News

வணிகர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி- மாநாட்டில் அமைச்சர்கள் பேச்சு!!

0

வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு ‘வணிகர் உரிமை முழக்க மாநாடு’ என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநாட்டில் வணிகர்களுக்கான ‘வி.வி.டி.’, ‘மைசாட்டோ’ ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:- ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார்.

2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:- வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம். இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:- திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.