யானை பலம் கொண்ட பிரதமர் மோடியை மூட்டைப்பூச்சி பிரியங்க் கார்கே விமர்சிக்கிறார்: ஈசுவரப்பா கடும் தாக்கு!!
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவதூறாக பேசினார். இது கார்கேவின் மரியாதையை தூள் தூளாக்கிவிட்டது. யானை அளவு பலம் கொண்ட பிரதமர்மோடியை, மூட்டைப்பூச்சி அளவிலான பிரியங்க் கார்கே விமர்சிப்பது சரியல்ல. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அறிக்கை. பஜ்ரங்தள தடை விவகாரத்தில் காங்கிரஸ்தலைவர்கள் இடையே குழப்பம் உள்ளது.
பஜ்ரங்தளம் என்பது, கலாசாரத்தை காக்கும் அமைப்பு. அதனை பி.எப்.ஐ. அமைப்புடன் ஒப்பிடுவது தவறு. இந்துக்களை ஓரங்கட்டும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. இது அக்கட்சிக்கு பேரழிவாகும். ஜெகதீஷ் ஷெட்டரின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா பற்றி பேசிய ஜெகதீஷ் ஷெட்டரிடம் சுயமரியாதையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் தனது சுயமரியாதையை தேர்தல் போட்டியிடுவதற்காக விற்றுவிட்டார். ஜெகதீஷ் ஷெட்டர் இன்னும் பா.ஜனதாவின் கோட்பாட்டை கைவிடவில்லை. அவரது வீட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. யாரோ ஒருவரின் நடத்தையால் தான் பா.ஜனதாவில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.
தேசியவாதிகளுக்கும், தேசவிரோதிகளுக்கும் இடையிலான தேர்தல் இது. டி.கே.சிவக்குமார் என் பின்னால் ஒக்கலிக சமுதாய மக்கள் இருப்பதாக கூறுகிறார். இவரை விட இனவெறி பிடித்த இன்னொருவர் இல்லை. சாதியின் பெயரால் தீ மூட்டும் வேலையில் ஈடுபடுகிறீர்கள். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும். பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய கூடாது என கூறி வீரப்பமொய்லியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்போம் என்ற அறிவிப்பை காங்கிரஸ் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.