காங்கிரஸ் கட்சி, இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு!!
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 5 கிலோ சிறு தானியங்கள் வழங்கப்படும். கர்நாடகத்தில் 54 லட்சம் விவசாயிகள் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விவசாய விளைபொருட்களை அரசு பஸ்களில் 50 கிலோ வரை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி, ஏழைகளுக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி பெண்களை சமமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது. தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் எப்போதும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.