;
Athirady Tamil News

ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான ஒரு எதிர்க்கட்சி மட்டும் பா.ஜனதாவுடன் மோத வேண்டும்: மம்தா பானர்ஜி!!

0

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இனிவரும் மாதங்களில் இப்பணி வேகமெடுக்கும் என்று தெரிகிறது. அதே சமயத்தில், தங்களை ஒடுக்க விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சம்ஷெர்கஞ்ச் பகுதியில், கங்கை நீர் அரிப்பால் வீடுகளை இழந்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி நடந்தது. அதில், அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜனதாவை எதிர்க்க வேண்டும். பா.ஜனதாவை தோற்கடிக்க ஒரே ஒரு எதிர்க்கட்சி மட்டும் மோத வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு வலுவாக உள்ள எதிர்க்கட்சி மட்டும் பா.ஜனதாவுடன் மோத வேண்டும்.

மற்ற எதிர்க்கட்சிகள், அந்த எதிர்க்கட்சியை ஆதரிக்க வேண்டும். ஓரணியாக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை பா.ஜனதா துன்புறுத்தி வருகிறது. யார் மீதாவது அந்த அமைப்புகளை ஏவி விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட நபர் மீது தவறு இல்லை, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று விசாரணை அதிகாரிகள் சொன்னாலும், வேறு ஏதாவது பொய் வழக்கு போட்டு அசிங்கப்படுத்துமாறு பா.ஜனதா சொல்கிறது. நாட்டை இதுபோன்று இழிவுபடுத்தக்கூடாது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையால் ஓட்டு கிடைக்காது என்பதை பா.ஜனதா புரிந்து கொள்ள வேண்டும்.

தேசபக்தி கொண்டவரும், ஒவ்வொருவரையும் நேசிப்பவரும்தான் உண்மையான தலைவர். அனைத்து மதங்களையும் நேசிக்க வேண்டும் முர்ஷிதாபாத், மால்டா மாவட்டங்களில் கங்கை அரிப்பு காரணமாக ஏராளமானோர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர். அப்பிரச்சினையை தடுக்க மத்திய அரசிடம் உதவி கேட்டோம். ஆனால் மத்திய அரசு உதவவில்லை. வங்காளதேசத்துடனான இருதரப்பு நதிநீர் ஒப்பந்தம் மூலம் கிடைத்த பணத்தில் மேற்கு வங்காள அரசின் பங்கான ரூ.700 கோடியையும் தரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.