மாதவிடாய் சுகாதாரம் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரத்தை பகிர்ந்த ஸ்மிருதி இரானி!!
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மாதவிடாய் பற்றி இரானி பேசுகிறார். ‘மாதவிடாயை ஒரு நோய் என்று கருதும் கட்டுக்கதைகளை உடைத்து, அந்த 5 நாட்களும் எனக்கு மாதவிடாய் வருகிறது. அது ஒரு நோய் அல்ல. எல்லா பெண்ணுக்கும் அது உண்டு. நான், எனது அம்மா, நீங்கள் மற்ற மில்லியன் கணக்கான இந்திய பெண்கள் என அனைவருக்கும்.
இப்போது நமக்கு உதவக்கூடியது விஸ்பர் சானிட்டரி பேடுகள். நீங்கள் புத்திசாலி, உங்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் கையாள முடியும். அப்படியென்றால் இந்த 5 நாட்கள்?’ என்று கேட்டிருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்த இரானி, ’25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய நிறுவனத்துக்கான எனது முதல் விளம்பரம். இருப்பினும் தலைப்பு பேன்சியாக இல்லை. ஒரு சானிட்டரி பேட் விளம்பரம் சம்பந்தப்பட்ட மாடலின் கனவையே முடிவுக்கு கொண்டு வரக்கூடும். அதனால் பலர் இதுபோன்ற விளம்பரங்களை புறக்கணித்தனர். கேமிராவுக்கு முன்னால் என் வேலையை தொடங்க ஆவலுடன் நான் எஸ் சொன்னேன்! எல்லாவற்றிற்கும் மேலாக மாதவிடாய் சுகாதாரம் குறித்து பேசுவது ஏன் தடையாக இருக்க வேண்டும்?’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.