திருப்பதியில் கொட்டி தீர்த்த மழை- பக்தர்கள் அவதி!!
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேணிகுண்டா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பகல் திருப்பதி மலையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்பதியில் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
திருப்பதி மலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. லட்டு கவுண்டர் பகுதியிலும் மழை நீர் தேங்கியதால் லட்டு பிரசாதம் வாங்க சென்ற பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் திருப்பதியில் இருந்து மலை பாதையில் வாகனங்களில் வந்த பக்தர்களும் மழையால் அவதி அடைந்தனர். திருப்பதியில் நேற்று 76,392 பேர் சாமி தரிசனம் செய்தனர். 36,248 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.