முடிசூட்டப்பட்ட மன்னர் 3ம் சார்லஸ், ராணி கமிலாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மன்னர் 3ம் சார்லசுக்கும், அவரது மனைவி அரசி கமிலாவிற்கும் நேற்று முடிசூட்டப்பட்டது. இந்த விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் அரசி கமிலாவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுவடையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.