கலவரம் எதிரொலி – மணிப்பூரில் நாளை நீட் தேர்வு தள்ளி வைப்பு!!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர்.
இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பதற்ற சூழலால் அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும் இணையதள சேவையை முடக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மத்திய கல்வி இணை மந்திரி டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில், பிராட்பேண்ட் மற்றும் இணையதள இணைப்பு பிரச்சனை ஏற்படும். அதனால், தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.) தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதன்படி தேர்வு தள்ளி வைப்பு பற்றிய அறிக்கையை என்.டி.ஏ. வெளியிட்டு உள்ளது. 5,751 தேர்வர்கள் மணிப்பூரின் 2 மையங்களில் தேர்வு எழுத இருந்தனர். தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.