ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- ஒருவர் பலி; 22 பேர் படுகாயம்!!
உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பயந்து போன அவர்கள் பாதுகாப்பு கருதி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட பீதி தணிவதற்குள் இரண்டாவது முறையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த முறை கடலுக்கு அடியில் சுமார் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக இருந்ததால் இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கடுமையான அதிர்வினை உணர்ந்தனர். இதனால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் சரிந்து விழுந்தன. அப்போது இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சேத விவரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஜப்பானில் சுமார் 120 மி.மீ. வரை கடுமையான மழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.