1000 ஆண்டு பாரம்பரியமான விழாவில் இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் 3ம் சார்லஸ்: ராணியாக மனைவி கமீலாவுக்கு கிரீடம்; தலைநகர் லண்டன் விழாக்கோலம் பூண்டது!!
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த கோலாகலமான முடிசூட்டு விழாவில், 1000 ஆண்டு பாரம்பரிய வழக்கப்படி, இங்கிலாந்தின் 40வது மன்னராக 3ம் சார்லஸ் முடிசூடிக் கொண்டார். அவரது மனைவி கமீலா இங்கிலாந்து ராணியாக முடிசூடப்பட்டார். 70 ஆண்டுக்குப் பின் நடந்த முடிசூட்டு விழாவைக் காண கொட்டும் மழையிலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று புதிய மன்னரையும், ராணியையும் வாழ்த்தினர். இங்கிலாந்தின் மகாராணியாக சுமார் 63 ஆண்டுகள் பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு காலமானார். அதைத் தொடர்ந்து அவரது மகன், 74 வயதாகும் 3ம் சார்லஸ் இங்கிலாந்து மன்னரானார். புதிய மன்னராக 3ம் சார்லஸ் அரச குடும்ப பாரம்பரியப்படி முடிசூடிக் கொள்ளும் விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்காக கடந்த சில மாதங்களாகவே தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உட்பட 2,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 70 ஆண்டுகள் கழித்து மன்னர் முடிசூட்டு விழா நடப்பதால் லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுமார் 20 ஆயிரம் மக்கள் முடிசூட்டு விழா நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் முன்பாக குவிந்திருந்தனர். 1000 ஆண்டுகள் வழக்கப்படி, பாரம்பரியமான முடிசூட்டு விழா நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. முதலில் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து, வைர விழா ரதத்தில் மன்னர் 3ம் சார்லசும், ராணி கமீலாவும் புறப்பட்டனர். இங்கிலாந்து உட்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6,000 ராணுவ வீரர்களின் பிரமாண்ட அணிவகுப்புடன் அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கிறிஸ்தவ மதப்படியான சடங்குகள் நடைபெற்றன.
இதில் முதல் முறையாக இந்து, முஸ்லீம், சீக்கியர், புத்த மதம் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்த தலைவர்கள் சடங்குகளில் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் அரச குடும்பத்து பொருட்களை மன்னர் சார்லசிடம் வழங்கினர். புனித பைபிள் வாசகங்களை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாசித்தார். அதைத் தொடர்ந்து, கேன்டர்பரி ஆர்ச்பிஷப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அனைவரும் ‘கடவுள் மன்னரை காப்பாற்றுவார்’ என முழங்கினர். பின்னர் சட்டத்தையும், தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
அவருக்கு தங்க நிற சிறப்பு உடை அணிவிக்கப்பட்டு, இந்தியா உட்பட 56 காமன்வெல்த் நாடுகளை குறிக்கும் வகையில் அந்நாடுகளைச் சேர்ந்த 56 இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட புனித எண்ணெய் உடலில் பூசப்பட்டு, 700 ஆண்டு பாரம்பரியமான அரியணையில் அமர வைக்கப்பட்டார். அப்போது, புனித செங்கோல் மற்றும் வாள் கையில் வழங்கப்பட்டு, 360 ஆண்டுகள் பழமையான வைரம், வைடூரியங்கள் பதிக்கப்பட்ட செயின்ட் எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது. இதன் மூலம் 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் 40வது மன்னராக முடிசூட்டப்பட்டார். இதே போல பல்வேறு சடங்குகளுடன் அவரது மனைவி கமீலாவுக்கு மேரி கிரீடம் சூட்டப்பட்டது. அவரும் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் தங்க ரதத்தில் பக்கிங்காம் அரண்மனை நோக்கி புறப்பட்டனர். 1762ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த தங்க ரதம் 1831ம் ஆண்டு 4ம் வில்லியம்ஸ் முடிசூட்டு விழாவில் இருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து பக்கிங்காம் அரண்மனை வந்த மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா மற்றும் அரச குடும்ப வாரிகள் அனைவரும் அரண்மனை பால்கனியில் நின்றபடி அங்கு குவிந்திருந்த மக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குவிந்து மன்னரையும், ராணியையும் வாழ்த்தினர். அப்போது இங்கிலாந்து விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. இங்கிலாந்து ராணுவ இசைக்குழு தேசிய கீதைத்தை இசைத்து முடிசூட்டு விழாவை நிறைவு செய்தன.
* 11 இந்திய வம்சாவளிகள் பங்கேற்பு
முடிசூட்டு விழாவில் இந்திய வம்சாவளியினர் 11 பேர் பங்கேற்றனர். இதில், ஒன்றிய அரசு தரப்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். பாலிவுட் நடிகை சோனம் கபூர், புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சவுரவ் பட்கே, இங்கிலாந்து இளவரசர் அறக்கட்டளையின் கடந்த ஆண்டிற்கான விருதுகளை வென்ற கல்ப்ஷா, ஜெய் படேல், கொரோனா காலத்தில் சமூக சேவை செய்ததற்காக இங்கிலாந்து பேரரசு பதக்கம் வென்ற சமையல் கலை நிபுணர் மஞ்சு மல்ஹி, பெங்களூரு டாக்டர் ஐசக் மதாய், மும்பை டப்பாவாலாக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இவர்களுடன், இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
* எதிர்ப்பாளர்கள் போராட்டம்
லண்டன் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிலாந்து தேசிய கொடியுடன் மன்னரை வரவேற்க காத்திருந்த நிலையில், மன்னராட்சியை ஒழிப்பதற்கான பிரசாரம் செய்யும் எதிர்ப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘எனது மன்னர் அல்ல’ என்கிற பதாகைகளுடன் அவர்கள் அரச குடும்பத்திற்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
* கோஹினூர் வைரம் இல்லாத மேரி கிரீடம்
ராணி கமீலா (வயது 75), 1911ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ராணி மேரியின் கிரீடத்தை அணிந்து நேற்று முடிசூடினார். இந்த கிரீடத்தில்தான் இந்தியாவின் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட 3 பெரிய விலைமதிப்பற்ற வைரக்கற்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் கமீலா நேற்று அணிந்த கிரீடத்தில் கோஹினூர் வைரம் தவிர்க்கப்பட்டிருந்தது. இந்த கிரீடம் 2,200 வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* ஓரங்கட்டப்பட்ட ஹாரி
மன்னர் 3ம் சார்லசின் மகனும் இளவரசருமான ஹாரி, முடிசூட்டு விழாவில் ஓரங்கட்டப்பட்டார். ஹாரி-மேகன் தம்பதி கடந்த 2020ம் ஆண்டே அரச பதவிகளை விட்டு வெளியேறினர். பின்னர் அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். ஹாரி, மேகன் அமெரிக்காவில் குடியேறிய நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த போது, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். ஆனாலும், நேற்றைய முடி சூட்டு விழாவில் மேகன் பங்கேற்கவில்லை. ஹாரி மட்டுமே விழாவுக்கு வந்திருந்தார். வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் முதல் வரிசையில் வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த நிலையில் அவரது சகோதரரான ஹாரிக்கு 3ம் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. முடிசூட்டு விழா முடிந்ததுமே அவசர அவசரமாக அவர் காரில் ஏறி புறப்பட்டார். பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் அரச குடும்பத்தினர் ஒன்றாக இருக்கும் நிகழ்வில், ஹாரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.