;
Athirady Tamil News

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பு.. (வீடியோ)

0

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்று கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்,

சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன.

விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க மெதுமெதுவாக ஆட்களை கொண்டு வந்து, சிங்கள பிரதேசங்களாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் பல விடயங்கள் நிறுத்தப்படலாமென பலர் நினைத்தனர். ஆனால் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கு பலமுறை முறையிடப்பட்டும், அது கவனிக்கப்படவில்லை.

இவற்றை நிறுத்த நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை, சாத்வீக வழி, பாராளுமன்றத்தின் ஊடாக முயற்சிக்க வேண்டும். அவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவற்றின் வேகம் போதாது என நினைக்கிறேன்.

நான் கந்தரோடையில் இருக்கிறேன். இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்களிற்கு இந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. எப்படி சிங்கள பௌத்த மத அடையாள மாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

அது மாத்திரமல்ல, சற்று அதிக பணம் கிடைக்கிறது என்றால் காணிகளை விற்கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டில் உள்ளவர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர்தான் கந்தரோடையில் விகாரை கட்டப்படவுள்ள காணியையும் விற்றவர். வெளிநாட்டிலுள்ள பலர், இங்குள்ள காணிகளை பிற சமூகத்தவர்களுக்கு விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து விற்று வருகிறார்கள். சில இடங்களில் காணிகள் விற்கப்பட்டுள்ளதை அறிகிறோம். நல்லூரிலும் விற்கப்படுகிறது.

இங்குள்ள இராணுவத்தினர் வெறும் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றை வாங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே, சிறியளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக மாற்று சமூகத்தினருக்கு விற்பதை நிறுத்துங்கள்.

இங்கு பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இப்போது நடக்கும் போராட்டங்கள் மிகச்சிறியவை. 3,5,10 பேருடன் நடக்கும் போராட்டங்களினால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படாது. பெருமெடுப்பிலான போராட்டங்களை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்

பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழர்களின் பிரச்சினை
இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை – என்றார்.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.