3ம் சார்லஸ்சின் முடிசூட்டு விழா; மன்னராட்சிக்கு எதிராக கோஷம் போட்ட 52 பேர் கைது: லண்டன் காவல் துறை அதிரடி!!
மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 52 பேரை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இங்கிலாந்தை 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி காலமானார். அவரது மகன் 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில், நேற்று லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள வெஸ்ட் மின்ஸ்டெர் அபேயில் 3ம் சார்லஸ்சின் முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதற்காக லண்டன் நகரமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னாராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய லண்டனில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய மன்னாராட்சி எதிர்ப்பு குழுவின் தலைவர் உட்பட 52 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டக்காரர்களின் ஊர்வலம் தொடங்கும் முன்பே, அந்த அமைப்பின் தலைவர் கிரஹாம் ஸ்மித் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அதேபோல் லண்டனின் சோஹோ நகரம், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ, வேல்ஸ் நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் இங்கிலாந்தில் 64% பேர் மன்னரின் முடிசூட்டு விழாவில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளனர்