பிரிட்டன் அரச செங்கோல் வைரம் எங்களுடையது -திருப்பி தருமாறு வற்புறுத்தும் தென்னாபிரிக்கா !!
பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு மீண்டும் கோரிக்கை எவிடுத்துள்ளனர் தென்னாபிரிக்கர்கள்.
தென் ஆபிரிக்காவில் இருந்து 1907 காலகட்டத்தில் எடுத்து வரப்பட்ட உலகின் மிகப்பெரிய வைரம், தற்போது மூன்றாம் சார்லஸ் பதவியேற்பின்போது பயன்படுத்த உள்ள செங்கோலில் உள்ளது. இந்த வைரத்தை தென் ஆபிரிக்காவிடமே திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டைச் சேர்ந்த பலராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.
தற்போது மீண்டும் இதுபற்றி வலுவாக குரலெழுப்பி இருக்கிறார்கள் தென்னாபிரிக்கர்கள். வைரத்தை தென் ஆபிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு ஜோகன்னஸ்பேர்க்கை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மோதுசி கமங்கா என்பவரின் முன்னெடுப்பில் சுமார் 8,000 பேர் ஒன்லைன் மனுவில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
கல்லினன் 1 என்று அழைக்கப்படும் 530 காரட் எடை கொண்ட இந்த வைரமானது, 1905-ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தென் ஆபிரிக்கா பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்நாட்டின் கொலனித்துவ அரசால் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செங்கோலில் உள்ள வைரமானது, பிரிட்டோரியாவுக்கு அருகில் வெட்டப்பட்ட 3,100 காரட் கல்லான, கல்லினன் வைரத்திலிருந்து வெட்டப்பட்டதென சொல்லப்படுகிறது. அதே கல்லில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய வைரம், கல்லினன் II என அழைக்கப்படுகிறது.
இது பிரிட்டன் மன்னர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் அணியும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் உள்ளது. க்யின் மேரியின் கிரீடம், பிற அரசு குடும்பத்தினர் ஆகியோரிடம் கல்லினன் வைரங்கள் III, IV, V ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.