80 ஆண்டுகளாக நீதிமன்றில் போராடிய 93 வயது மூதாட்டிக்கு கிடைத்த வெற்றி !!
93 வயதான மூதாட்டி ஒருவர் 80 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன் மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பின் மூலம் கடந்த எட்டு தசாப்தங்களாக நீடித்து வந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது. ரூபி மேன்சன் என்று அழைக்கப்படும் இந்த குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள இந்த வீடு 500 முதல் 600 சதுர அடி அளவு கொண்டுள்ளது. இதனை மார்ச் 28, 1942 அன்று இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கையகப்படுத்தியது. பின் ஜூலை 1946 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட கையகப்படுத்தும் உத்தரவு இ ரத்து செய்யப்பட்டது.
எனினும், இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதை எதிர்த்து அலைஸ் டிசோசா வழக்கு தொடர்ந்து இருந்தார். இவரது வீட்டை முன்னாள் அரசு அதிகாரியின் சட்டபூர்வ வாரிசுகள் பயன்படுத்தி வந்தனர்.
கையகப்படுத்தல் சட்டத்தை இரத்து செய்த உத்தரவை நடைமுறைப்படுத்த மராட்டிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அலைஸ் டிசோசா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.இவரது மனுவுக்கு வீட்டில் குடியிருந்த அப்போதைய அரசு அதிகாரியின் வாரிசுகள் தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர்.
வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், வீட்டை அலைஸ் டிசோசாவுக்கே ஒதுக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் 80 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது.