காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கிறது: அமித்ஷா பேச்சு!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி அமித்ஷா பேசியதை தொலைக்காட்சி சேனல்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் வீடியோ எடுக்க கூடாது என்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் கூறினார்கள். இதனால் கோபம் அடைந்த அமித்ஷா, வீடியோ எடுக்க அனுமதிக்கும்படி மத்திய ஆயுதப்படை வீரர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது:- இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கர்நாடகத்தில் சாதி மற்றும் மதங்களுக்கு இடையே காங்கிரஸ் தலைவர்கள் சண்டையை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தேர்தலுக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதே காங்கிரசின் வேலையாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இரட்டை என்ஜின் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தான் உத்தரவாத அட்டையே கொடுக்கின்றனர். வருகிற 10-ந் தேதி அனைத்து மக்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.