வீடு ஒன்றில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்…!
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இந்திய ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானமானது ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் பிரவேசித்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை மீறிய விமானம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.
இதனால், இரண்டு பெண்கள் உட்பட பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் விழுவதற்கு முன்னர் விமானத்தின் விமானி பெராசூட் உதவியுடன் வெளியேறிவிட்டதாக விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளதோடு, பதற்றமான சூழ்நிலைகள் எதுவும் ஏற்படாதவகையில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
விமான விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகளை நடத்த அதிகாரிகளுக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.