தொழிலாளர்கள்-உணவு வினியோக ஊழியர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி !!
கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்திற்காக கர்நாடகம் வந்துள்ள ராகுல்காந்தி பெங்களூரில் சிறுசிறு வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிலாளர்கள் தங்களது அவல நிலையை ராகுல்காந்தியிடம் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, அங்குள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளர்களுடன் அமர்ந்து ராகுல்காந்தி மசாலா தோசைகள் மற்றும் காபி ஆர்டர் செய்து சேர்ந்து சாப்பிட்டார்.
அப்போது ராகுல்காந்தியிடம் தொழிலாளர்கள் கூறுகையில், வேலையில்லா திண்டாட்டத்தால் குறைவான ஊதியம் பெறும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி தொடர்ந்து அவர்களுடன் உரையாடினார். அப்போது விளையாட்டுகள் பற்றியும் விவாதித்தார். மேலும் தொழிலாளர்களுக்கு பிடித்த கால்பந்து வீரர்களை பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஸ்விக்கீ, சுமோட்டா, ப்ளிங்க்கிட் உள்ளிட்ட உணவு வினியோக நிறுவன ஊழியர்களுடனும் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் வாழ்க்கை, நிலையான வேலையின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை பற்றி விவாதித்தனர்.