ரன்வேயில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த விமான எஞ்சின் !!
பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமானம் ஓடுபாதையில் செல்வதில் இருந்து அதன் எஞ்சின் திடீரென தீப்பற்றி எரியும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான எஞ்சின் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓடுபாதையில் இருந்து விமானம் டேக் ஆஃப் ஆக சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், அதன் எஞ்சினில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. பின் எஞ்சின் தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பின் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் எஞ்சின் வெடித்து விபத்து ஏற்பட்டதால் குறிப்பிட்ட ஓடுபாதை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மூடப்பட்டது. இதன் காரணமாக சில விமானங்களின் புறப்பாடு நேரம் தாமதமானது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த பயணிகள் அடுத்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.